மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக பெரும்பான்மையை நிரூபித்தது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். இதனால் போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. முதலமைச்சர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று, அதில் பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வானார். அத்துடன் 4-வது முறையாக மத்தியப் பிரதேச முதலமைச்சராகவும் அவர் பதவியேற்றார். மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், இன்று சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதேசமயம் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சிவராஜ் சிங் சவுகான் பெரும்பான்மையை நிரூபித்தார். இதன்மூலம் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக 4வது முறை அவர் பதவி வகிக்க உள்ளார். இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களும் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.