இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்
என மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிவசேனா எம்.பி அனில் தேசாய் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 2050ஆம் ஆண்டிற்குள் சீனாவை விட இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து விடும் என்ற நிலையில் இந்த மசோதாவை கொண்டு வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன் இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட சிறு குடும்பத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகைகள், சமூக நலத் திட்டங்கள் மற்றும் பள்ளிச் சேர்க்கையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு அதிக வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், அரசின் சலுகைகள் வழங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியல் சாசன திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இரண்டு குழந்தைகள் கொண்ட சிறு குடும்ப முறையை மாநிலங்கள் ஊக்குவிக்கும் என்றும், இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்வதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தனது மசோதாவில் அனில் தேசாய் தெரிவித்துள்ளார்.