சஞ்சய் கெய்க்வாட் ட்விட்டர்
இந்தியா

’புலியை வேட்டையாடி அதன் பல்லைக் கழுத்தில் அணிந்தேன்’ - சிவசேனா எம்.எல்.ஏ. வீடியோவால் பரபரப்பு

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் புலியை வேட்டையாடியது குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் சிவசேனா அணியில் இருந்து பிரிந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநில முதல்வராக உள்ளார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏவாக இருப்பவர், சஞ்சய் கெய்க்வாட். இவர், தற்போது கூறியிருக்கும் ஒரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர், தாம் 37 ஆண்டுகளுக்கு (1987ஆம் ஆண்டு) முன்பு புலி ஒன்றை வேட்டையாடியதாகவும், அதன் பல்லை எடுத்து கழுத்தில் அணிந்ததாகவும் கூறியுள்ளார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளான சிவ ஜெயந்தியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த வீடியோவை எதிரணியான உத்தவ் தாக்கரே அணி வைரலாக்கி வருகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், புலியின் பாகங்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் அதுகுறித்து இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

புலிகளை வேட்டையாடுவது 1987க்கு முன்பே நாட்டில் கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவால் அவர்மீது வழக்குகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புல்தானா தொகுதி எம்.எல்.ஏவான சஞ்சய் கெய்க்வாட், கடந்த 2021ஆம் ஆண்டு பேசிய கருத்து ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ’ஒருவேளை எனது கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால், அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன்’ எனக் கூறியிருந்தார். அப்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்தார். (தற்போது பாஜக கூட்டணியில்தான் ஏக்நாத் ஷிண்டே இணைந்துள்ளார்). அப்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.