இந்தியா

“ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படும் என வதந்தி பரவுகிறது”- விளக்கம் கொடுத்த கோயில் நிர்வாகம்

“ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படும் என வதந்தி பரவுகிறது”- விளக்கம் கொடுத்த கோயில் நிர்வாகம்

Rasus

ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் மூடப்படும் என தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. நாள்தோறும் அங்கு திரளான பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி செல்கின்றனர். முதலில் சிறிய கிராமமாக இருந்த ஷீரடி, சாய்பாபா கோயில் அமைந்த‌ பிறகு, ரயில் நிலையம், விமான‌ நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு பிரபலமானது.

இந்நிலையில், ஷீரடி சாய்பாபா பிறந்த ஊர் பர்பானி பகுதியில் உள்ள பத்ரி என்ற கிராமம்தான் என்ற கருத்து எழுந்தது. ஆனால், பர்பானியில்தான்‌ சாய்பாபா பிறந்தார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று ஒரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியது. அதேசமயம் பத்ரியை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இதனால் பத்ரி பிரபலமடைவதோடு, ஷீரடிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என கூறப்படுகின்றது. இதனிடையே ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் முகலிகர், “ நாளை( ஜனவரி19) முதல் ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்பட உள்ளதாக தகவல் பரவுகிறது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை. அது வெறும் வதந்தி. அதனால் இதுகுறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோயில் வழக்கம்போல திறந்தே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.