டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலின் தழும்புகள் மெல்ல மெல்ல மாறினாலும், தடம் மாறாமல் கடலுக்கும் செல்ல முடியாமல், கரையிலும் நிற்க முடியாமல் காரைக்காலில் கரை ஒதுங்கிய கப்பல் காட்சிப்பொருளாகவும் கஜாப்புயலின் நினைவு சின்னமாகவும் காட்சியளிக்கின்றது.
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கி ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியதோடு மக்களையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியது. இந்த புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வடுக்கல் மெல்ல மெல்ல மாறி வருகின்றது.
இந்த நிலையில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் காரைக்கால் துறைமுகத்திற்கு தூர்வார வந்த பலகோடி ரூபாய் மதிப்புடைய மும்பை தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், 15 ஊழியர்களுடன் காரைக்கால் வாஞ்சூர் மீனவ கிராமத்தில் தரை தட்டி நின்றது. இந்த கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் இந்த கப்பலை மட்டும் இன்னும் மீட்க முடியவில்லை.
கரை தட்டிய இந்த கப்பலை மீட்டு கடலுக்குள் கொண்டு செல்ல எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. இதனால் இந்த கப்பலை உடைக்க முடிவு செய்யப்பட்டது. அப்படி இந்த கப்பலை உடைத்தால் அதில் உள்ள ரசாயன கழிவுகள் கடல் வளத்தை பாதிக்கும் என்பதால் மத்திய சுற்றுச்சூழலின் துறையின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்த கப்பலில் உள்ள விலை உயர்ந்த பாகங்கள் சமூக விரோதிகளால் திருடப்பட்டும் வருகின்றது. கேட்பாரற்று கஜா புயலின் நினைவு சின்னமாக கரையோரம் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளாக இங்கு நிற்கும் இந்த கப்பலால் கடலின் நீரோட்டம் மாறுவதாகவும் சமூக விரோதிகள் கப்பலில் ஏறி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கும் இப்பகுதி மீனவர் மக்கள், இந்த கப்பலை எப்படியாவது இங்கிருந்து அகற்ற வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைக்கின்றார்கள்.