ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே pt web
இந்தியா

ஷிண்டேவின் சிவசேனை தான் உண்மையானது... சபாநாயகரின் வார்த்தைகளால் அதிர்ந்த உத்தவ் தாக்கரே!

“இந்த தீர்ப்பு ஜனநாயகத்தின் வெற்றி. தனியார் நிறுவனம் போல் கட்சியை நடத்துபவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறை" - ஏக்நாத் ஷிண்டே

Angeshwar G

சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே என இரு பிரிவுகளாக 2022 ஆம் ஆண்டு பிரிந்தது. முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே மீது எழுந்த அதிருப்தியின் காரணமாக ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து பிரிந்தனர்.

அதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்தனர். முடிவாக உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத்ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

ஏக்நாத் ஷிண்டே

2023 ஆம் ஆண்டு சிவசேனாவின் கட்சிப்பெயரும், சின்னமும் ஏக்நாத்ஷிண்டே பிரிவிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரியும், உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் இருதரப்பும் சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவினர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகர் நார்வேகருக்கு டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 10 தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

உத்தவ் தாக்கரே

இதனை அடுத்து தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக தனது முடிவை வாசித்த சபாநாயகர் நார்வேகர், “முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா” என கூறினார். ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் தனியாக வந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் கடந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருதரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்தையும் நார்வேகர் மறுத்துவிட்டார். கட்சியின் 55 உறுப்பினர்களில் 37 பேர் ஷிண்டேவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் தலைவர் பொறுப்பை ஏற்றார். இதனால் ஷிண்டேவை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கும் அதிகாரம் தாக்கரேவிற்கு இல்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

தாக்கரே பிரிவினர் 2018 ஆண்டு கட்சி விதிகளில் கொண்டு வந்த திருத்தத்தை நம்பி இருந்த நிலையில், அந்தாண்டு அமைப்பு ரீதியான தேர்தல் ஏதும் நடைபெறாததால், இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவேடுகளிலும் இல்லாததால், தேர்தல் ஆணையத்திடம் கடைசியாக 1999 ஆம் ஆண்டே தேர்தல் விதிகள் சமர்பிக்கப்பட்டிருந்தன. 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டிருந்த திருத்தத்தில் கட்சியின் தலைவருக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், 1999 ஆம் ஆண்டு கட்சியின் விதிகளில் தேசிய செயற்குழுவிற்கே அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. எனவே இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு 1999 ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட கட்சியின் விதிகளே சரியான வழியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து உசநீதிமன்றத்தை அணுகப்போவதாக சிவசேனாவின் உத்தர் தாக்கரே பிரிவு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷிண்டே, தனிப்பட்ட நபரின் கருத்து கட்சியின் முடிவாகாது. எந்த ஒரு கட்சியும் தனியாருக்கான சொத்து அல்ல. இது எதேச்சதிகாரம் மற்றும் அரசியலுக்கு எதிரானது என தெரிவித்திருந்தார்.

இன்று பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “இந்த தீர்ப்பு ஜனநாயகத்தின் வெற்றி. தனியார் நிறுவனம் போல் கட்சியை நடத்துபவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறை. வாரிசு அரசியலுக்கு ஏற்பட்ட தோல்வி” என தெரிவித்துள்ளார்.