ராகுல் காந்தி முகநூல்
இந்தியா

‘ராகுலின் நாக்கை வெட்டினால் ரூ 11 லட்சம்..’ எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை.. வழக்குப்பதிந்த காவல்துறை!

PT WEB

வெளிநாட்டில் ராகுல் காந்தி நிகழ்த்திய உரையை சுட்டிக்காட்டிய சிவசேனாவின் ஷிண்டே பிரிவு சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட், “மராத்தா, தங்கர், மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்கள், தங்கள் இடஒதுக்கீட்டுக்காக போராடும் நிலையில், ராகுல் காந்தி எப்படி, இப்படி பேசலாம்?

இந்தியாவில் இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பதில் ராகுல்காந்தி மும்முரமாக உள்ளார். இடஒதுக்கீட்டுக்கு எதிரான ராகுல்காந்தியின் மனநிலையை, அவரது பேச்சு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இடஒதுக்கீடு மூலமாக மராத்தா, தங்கர் போன்ற சமுதாய மக்கள் பெற்று வரும் பலனை, மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பதே ராகுல்காந்தியின் மனநிலை.

நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளும் முயற்சியில், காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்த கட்சி காங்கிரஸ் என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுங்கள்... 11 லட்சம் ரூபாய் தருகிறேன்” என்றார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் நாக்கை அறுக்க வேண்டும் என்ற சஞ்சய் கெய்க்வாட்டின் பேச்சை தாங்கள் ஏற்கவில்லை என அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. அதே வேளையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தவர் என அம்மாநில பாஜக தலைவர் பவன்குலே தெரிவித்துள்ளார்.

நாக்கை வெட்டினால் பரிசு என அறிவித்த சஞ்சய் கெய்க்வாட்டுக்கு, சர்ச்சையான பேச்சோ, செயலோ புதிதல்ல. பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலரை காரை சுத்தம் செய்ய வைத்தது, 1987-ல் புலியை வேட்டையாடி பல்லை எடுத்ததாகச் சொன்னது உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் தான் சஞ்சய் கெய்க்வாட். இந்நிலையில், ராகுல் காந்தி குறித்து சஞ்சய்-யின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.