ஆபாசப் படங்களை தயாரித்த புகாரில் கைது செய்யப்பட்ட தன்னுடைய கணவர் அப்பாவியென கூறியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.
கடந்த 20 ம் தேதி, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும், இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும் மும்பை காவல்துறை தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் உமேஷ் என்ற நபர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்கள் தொடர்பாக ராஜ் குந்த்ராவிற்கும் உமேஷ்க்கும் இடையில் பணப்பரிவர்த்தனை நடந்ததுள்ளன. இது குறித்து இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது எஃப்.ஐ.ஆரில் தான் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார். இவர்கள் உருவாக்கும் ஆபாச வீடியோக்கள் சந்தா முறையில் இயங்கும் சில செயலிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
முன்னதாக இந்த ஆபாசப் படங்கள் வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், 9 தயாரிப்பாளர்களை மும்பை போலீஸ் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அப்படங்களின் தயாரிப்பில் எவ்வித தொடர்பும் இல்லையென்று ஷில்பா ஷெட்டி விசாரணையில் விளக்கமளித்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. விசாரணையின்போது, தன் கணவர் ஒரு அப்பாவி என்றும் அவர் கூறியுள்ளார் என தெரிகிறது.
இந்த விவகாரத்தில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்றும், ராஜ் குந்த்ரா நிர்வகிக்கும் செயலியில் இருக்கும் படங்கள்யாவும் ஆபாசப்படங்கள் இல்லையென்றும், அவையாவும் பிறவித ஓ.டி.டி. தளங்களில் இருப்பது போல ‘பாலுணர்வை தூண்டும் வகையிலான திரைப்படங்கள்தான்’ (‘not pornography but erotica’) என்றும் ஷில்பா ஷெட்டி கூறியிருப்பதாக தெரிகிறது.
ராஜ் குந்த்ராவின் செயலியை நிர்வகித்த நிறுவனத்திலிருந்து சமீபத்தில்தான் ஷில்பா ஷெட்டி விலகியிருந்தார் என்ற அடிப்படையில்தான், தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அடுத்தகட்ட விசாரணையில் ஷில்பா ஷெட்டியின் வங்கிக்கணக்குள் விசாரிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
ஷில்பா ஷெட்டி மட்டுமன்றி, ராஜ் குந்த்ராவும் தன் மீது எந்தவித தவறும் இல்லையென்றுதான் சொல்லிவருகிறார். தனது கைது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறி கடந்த வெள்ளிக்கிழமை மும்பை உயர்நீதிமன்றத்தை அவர் அணுகியிருந்தார்.