இந்தியா

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஆதரவற்ற திருநங்கைகளுக்கு இல்லங்கள்: மத்திய அரசு தகவல்

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஆதரவற்ற திருநங்கைகளுக்கு இல்லங்கள்: மத்திய அரசு தகவல்

நிவேதா ஜெகராஜா

ஆதரவற்ற திருநங்கைகளுக்கு இருப்பிட வசதி அடங்கிய பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அவர்களுக்கு அளிப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் நாராயண்ஸ்வாமி இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்தார்.

அதில், "திருநங்கைகளுக்கு தங்கும் இல்லங்களை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 12 மாதிரி இல்லங்களை உருவாக்குவதற்காக சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த தங்கும் இல்லங்கள் அமைக்கப்படவுள்ளன.

திருநங்கைகளுக்கு பாதுகாப்பான உறைவிடங்களை அமைப்பதற்காக உருவாக்கப்படவுள்ள இந்த இல்லங்களில் உணவு, மருத்துவ வசதி, பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அடிப்படை அம்சங்களுடன் திறன் வளர்ச்சி சம்பந்தமான திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் அமல்படுத்தப்படும் தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் 3,384 திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

பிச்சை எடுப்போருக்கு மறுவாழ்வு: 'ஸ்மைல்' என்று அழைக்கப்படும் விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு ஆதரவு என்ற திட்டத்தின் துணைத் திட்டமாக பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்கான விரிவான மத்திய துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், மனநல ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் வளர்த்தல் மற்றும் பொருளாதார தொடர்புகள் ஆகியவற்றை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரிவான மறுவாழ்வை வழங்குவதற்கான மாதிரி திட்டங்களையும் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

மேலும், பிச்சை எடுக்கும் குழந்தைகள், அதில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதை உறுதிபடுத்துவது தொடர்பாக பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.