ys sharmila, jagan mohan reddy PT
இந்தியா

சித்தப்பா கொலைக்கு நீதி! அண்ணனுக்கு எதிராக தங்கையின் போர்க்கொடி? ஆந்திராவில் நடப்பது என்ன?

இரா.செந்தில் கரிகாலன்

ஆந்திராவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் வரும் 13-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இன்று மாலையோடு பிரசாரம் ஓயவிருக்கும் சூழலில் ஆளும் கட்சியான ஒ.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு எதிராக மிகத் தீவிரமாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்து வருகின்றன. அதிலும், முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, அண்ணன் ஜெகனுக்கு எதிராகவும் தான் போட்டியிடும் கடப்பா தொகுதியில் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியிருக்கும் மற்றுமொரு உறவினரான அவினாஷ் ரெட்டிக்கு எதிராகவும் மிகத் தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். அதிலும், 2019-ல் கொலை செய்யப்பட்ட தனது சித்தப்பாவின் புகைப்படத்தைக் கையில் ஏந்தி அவர் மரணத்துக்கு நீதிவேண்டும் என தீவிரப் பரப்புரை செய்துவருகிறார். ஆந்திர தேர்தல் களத்தில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கும் விவேகானந்த ரெட்டி யார்? அவர் எதற்காக கொல்லப்பட்டார்?

ஒன்றுபட்ட ஆந்திராவில் வலிமைமிக்க தலைவராக விளங்கியவர் ராஜசேகர் ரெட்டி. காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான பொறுப்புகளில் பதவி வகித்தவர். தவிர, ஒன்றுபட்ட ஆந்திராவின் முதலமைச்சராக இரண்டுமுறை (2004,09) தொடர்சியாக வெற்றி பெற்றவர். இவரின் சகோதரர்தான் விவேகானந்த ரெட்டி. இவர், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்ததுடன், 1999 மற்றும் 2004-ல் ராஜசேகர் ரெட்டிக்கு செல்வாக்கு மிகுந்த கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார் அவரின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், அப்போது காங்கிரஸ் கட்சியிலேயே தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார் விவேகானந்த ரெட்டி. தொடர்ச்சியாக, 2011-ல் நடந்த புலிவெந்துலா சட்டமன்றத் தேர்தலிலும், ஒய்.எஸ்.ஆர் சார்பில் போட்டியிட்ட ராஜசேகர் ரெட்டியின் மனைவியான விஜயம்மாவை எதிர்த்துக் களமிறங்கினார் விவேகானந்தா ரெட்டி. அந்தத் தேர்தலில் அவர் படுதோல்வியைத் தழுவினார். தொடர்ச்சியாக காங்கிரஸில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த, விவேகானந்த ரெட்டி 2019-ம் ஆண்டு தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

முதலில் ஹார்ட் அட்டாக் என்று சொல்லப்பட்டது. பின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என்று முடிவுக்கு வரப்பட்டது. விவேகானந்த ரெட்டியின் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை கோரினார் ஜெகன் மோகன் ரெட்டி. மேலும் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவைக் குற்றம் சாட்டினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தார். ஆனால், ஜெகனின் இந்த முடிவை எதிர்த்து விவேகானந்தா ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி நீதிமன்றத்தை நாடினார்.

தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கடப்பா தொகுதியின் எம்.பியும் ஜெகனின் மற்றொரு உறவினருமான அவினாஷ் ரெட்டியின் பெயரும் குற்றவாளிகளின் இடம் பெற்றது. கூடுதலாக, அவரின் தந்தை ஒய்.எஸ்.பாஸ்கர் ரெட்டியையும், அவினாஷ் ரெட்டியின் உதவியாளரையும் கைது செய்தது சி.பி.ஐ. தொடர்ச்சியாக தற்போது வரை அந்த விசாரணை நடந்துகொண்டே இருக்கிறது. 2017-ல் நடைபெற்ற எம்.எல்.சி தேர்தலில் புலிவெந்துலாவில் போட்டியிட்டார் விவேகானந்த ரெட்டி. அப்போது, அவரை மறைமுகமாகத் தோற்கடித்தது, ஒய்.எஸ்.பாஸ்கர் ரெட்டி மற்றும் அவினாஷ் ரெட்டி தான் எனப் புரிந்துக்கொண்டு அவரைத் திட்டியதாகவும், தொடர்ந்து 2019 தேர்தலில் கடப்பா தேர்தலில் அவினாஷ் ரெட்டிக்கு சீட் கொடுக்ககூடாது என விவேகானந்தா ரெட்டி முட்டுக்கட்டை போட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

ys sharmila joins cong

தற்போது இந்தக் கொலை விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஆந்திர பிரதேசத்தின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா. அவரும் கடப்பா தொகுதியில்தான் போட்டியிடுகிறார். நாம் மேலே குறிப்பிட்ட அவினாஷ் ரெட்டியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பாக கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார். தன் சித்தப்பா மரணத்தில் சம்மந்தமுடைய தனது உறவினரான அவினாஷ் ரெட்டியை தன் அண்ணன் ஜெகன் காப்பாற்றுகிறார் எனக் குற்றம் சாட்டுகிறார் ஒய்.எஸ்.ஷர்மிளா. குற்றத்துக்கும் நீதிக்கும் இடையிலான யுத்தம் என கடப்பா நாடாளுமன்றத் தேர்தலை வர்ணிக்கிறார். அவருக்கு ஆதரவாக விவேகானந்தா ரெட்டியின் மனைவி சவுபாக்கியம்மாவும் மகள் சுனிதா ரெட்டியும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

ராஜசேகர் ரெட்டியின் குடும்பத்தில் அசாதாரண மரணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ராஜசேகர் ரெட்டியின் தந்தையான ராஜா ரெட்டி 1998-ம் ஆண்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை சம்பவத்தில் தெலுங்குதேசம் கட்சியின் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டில் ஆந்திராவின் மிகப்பெரும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்த ராஜசேகர் ரெட்டியும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்து போனார். 2019-ல் அவரின் சகோதரர் விவேகானந்தா ரெட்டி யின் மரணம். தெலுங்கு திரைப்படங்களில் பார்ப்பது போலவே தெலுங்கு அரசியல் களமும் பரபரப்புக்கும் பழிவாங்கலுக்கும் பஞ்சமில்லாதது. அதேபோல, குடும்ப மோதல்கள் என்பதும் ஆந்திர அரசியல் களத்தில் புதிய விஷயமில்லை. இவ்வளவு ஆண்டுகள் கழித்து சித்தப்பாவின் மரணத்தை அரசியல் துருப்புச் சீட்டாகக் கையிலெடுத்திருக்கிறார் ஒய்.எஸ்.ஷர்மிளா. அது எந்தளவுக்குக் கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..