ராகுல் காந்தி எக்ஸ் தளம்
இந்தியா

தேசிய விளையாட்டுத் தினம்| தற்காப்பு கலை பயிற்சி.. வீடியோவைப் பகிர்ந்த ராகுல் காந்தி!

Prakash J

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி (இன்று) தேசிய விளையாட்டுத் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹாக்கி விளையாட்டின் ஹீரோ என அழைக்கப்படும் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளான இன்றைய தினத்தில், அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியொ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி குழந்தைகளுடன் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

இதுகுறித்து அவர், “பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்தோம். எங்கள் முகாம் தளத்தில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய வழியாகத் தொடங்கிய இது, நாங்கள் தங்கியிருந்த ஊர்களைச் சேர்ந்த சக யாத்ரிகர்களையும் இளம் தற்காப்புக் கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து சமூக நடவடிக்கையாக உருவானது.

தியானம், ஜியு-ஜிட்சு, ஐகிடோ மற்றும் வன்முறையற்ற மோதலைத் தீர்க்கும் நுட்பங்களின் இணக்கமான கலவையான ஜென்டில் ஆர்ட்டின் அழகை இந்த இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்களிடம் விதைப்பதை நோக்கமாகக் கொண்டோம்.

மேலும் இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்குகிறோம். இந்த தேசிய விளையாட்டு தினத்தில், உங்களில் சிலரை ஜென்டில் ஆர்ட் பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில், எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்திய பணக்காரர் பட்டியல்| முதல் இடத்துக்கு முன்னேறிய கவுதம் அதானி! 2ம் இடத்தில் அம்பானி!