ajit pawar, sharad pawar  ani
இந்தியா

“நான் சோர்வடையவில்லை”- அஜித் பவாருக்கு சரத் பவார் பதிலடி!

"நான் சோர்வடையவில்லை” என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அஜித் பவாருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

Prakash J

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அக்கட்சியிலிருந்து வெளியேறிய அஜித் பவார், கடந்த ஜூலை 2ஆம் தேதி அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வராகப் பதவியேற்றார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 29 பேரில் 8 பேருக்கு அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார்.

இது, மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அஜித் பவார் மற்றும் சரத் பவார் ஆகியோர் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி சரத் பவார் தலைமையில், தேசியவாத காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

சரத் பவார்

இக்கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஜக அரசின் அரசியலமைப்பு சட்டவிரோத மற்றும் அரசு அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துவதற்கு எதிராகப் போரிடுவது, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பெண்களின் துயருக்குக் காரணமான பாஜகவின் கொள்கைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும், பாஜக அணியில் இணைந்த எம்பிக்கள் பிரபுல் படேல், சுனில் தாட்கரே மற்றும் 9 தலைவர்களை கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கு செயற்குழு ஒப்புதல் அளித்தது.

அதேநேரத்தில் இக்கூட்டம் குறித்து அஜித் பவார் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், “என்சிபி தேசிய தலைவராக அஜித் பவார் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை எவரும் எந்தவொரு கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்க முடியாது. எனவே இன்று நடைபெற்ற கூட்டம் சட்டப்பூர்வமானது அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் சட்டப்பூர்வமானவை அல்ல” என்று கூறப்பட்டிருந்தது.

அஜித் பவார்

இதனிடையே, ”சரத் பவார் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று அடுத்த தலைமுறையினருக்கு வழி ஏற்படுத்த வேண்டும்” என அஜித் பவார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், "என்மீது தவறான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நான் சரத் பவார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் ஓய்வுபெற வேண்டும். இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். அரசியலில்கூட பாஜக தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உதாரணமாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரைப் பாருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

சர்த பவார்

இதற்கு சரத் பவார், "நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார்? நான் பிரதமர் ஆகவோ, மந்திரி ஆகவோ ஆசைப்படவில்லை. நான் மக்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.