இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்று, கேதார்நாத். இது உத்தராகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில், கார்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோயில், இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக, இக்கோயில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி வரை திறந்திருக்கும்.
இந்த நிலையில், இதேபோன்றதொரு கோயிலை தலைநகர் டெல்லியில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஜூலை 10ஆம் தேதி, வடமேற்கு டெல்லியில் புராரிக்கு அருகில் உள்ள ஹிராங்கியில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்றுமுதல் இக்கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கேதார் சபையின் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சுக்லா, ”கோயில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் டெல்லியில் உள்ள ஒரு மத அறக்கட்டளையால் கேதார்நாத் கோயிலை கட்டுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அது அதே வடிவத்தில் இருக்கும். கேதார்நாத் சன்னதி பகுதியிலிருந்து ஒரு கல்லும் மாற்றப்படும், இதனால் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலின் புனிதம் குறைகிறது. டெல்லியில் அதே பெயரில் கோயில் கட்டப்பட்டதும், கேதார்நாத் புனித நீரை பக்தர்களுக்கு விநியோகிப்பதாக அவ்வறக்கட்டளை அறிவித்துள்ளது.
இது சனாதன தர்மத்தின் அனைத்து மத வழிகாட்டுதல்களுக்கும் எதிரானது. டெல்லியில் உள்ள புராரியில் கேதார்நாத் கோவிலை அதே பெயரிலும் வடிவத்திலும் ஓர் அறக்கட்டளைமூலம் கட்ட உத்தேசித்திருப்பது உத்தரகாண்டில் உள்ள கோயிலின் புனிதத்தைக் குறைத்து பக்தர்களிடம் பணம் சம்பாதிப்பதற்கான சதியே தவிர வேறில்லை” எனக் குற்றஞ்சாட்டியதுடன், இந்தப் பூமி பூஜையின்போது அவரது குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தினர். ஆனால், இந்தப் போராட்டத்தின் போது கேதார் சபையின் தலைவர் ராஜ்குமார் திவாரி கலந்துகொள்ளவில்லை. ஆனால் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு தனது ஆதரவை வழங்கியிருந்தார்.
அதேநேரத்தில், இந்தக் கோயிலை டெல்லியில் கட்டுவதற்கும் ஆதரவு எழுந்துள்ளது. டெல்லி யாத்ரீகர் அனிருத் திரிபாதி, “உத்தரகாண்டில் பருவமழையின்போது கேதார்நாத்தை தரிசனம் செய்வது கடினம். அது நம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், டெல்லியில் இதுபோன்ற ஒரு கோயில் கட்டப்பட்டால், பல வயதானவர்கள் மற்றும் பலவீனமான உடல்நலத்துடன் இருக்கும் பக்தர்கள் எந்த தடையும் இல்லாமல் சிவபெருமானிடம் ஆசி பெற முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ”டெல்லியில் கட்டப்படும் கேதார்நாத் கோயில், தாம் அல்ல” என புராரியில் உள்ள ஸ்ரீகேதார்நாத் தாம் டெல்லி அறக்கட்டளையின் தலைவரான சுரிந்தர் ரவுடேலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”டெல்லியில் கேதார்நாத் கோயில் கட்டப்படுவது, தாம் வடிவில் அல்ல. எங்களுடைய ஸ்ரீகேதார்நாத் தாம் டெல்லி அறக்கட்டளைதான் இந்தக் கோயிலைக் கட்டுகிறது. இந்த திட்டத்திற்கும் உத்தரகாண்ட் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உத்தரகாண்ட் முதல்வர் எங்கள் வேண்டுகோளின்படி, பூமி பூஜைக்காக இங்கு வந்தார். இந்த திட்டம், அறக்கட்டளை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு செயல்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் பிரபலமான கோயில்களை அடிப்படையாகக் கொண்டு பல கோயில்கள் உள்ளன. சாய் கோயில், காது ஷியாம் கோயில் போன்றவற்றின் அடிப்படையில் நாடு முழுவதும் கோயில்கள் உள்ளன. இந்தூரில் பல ஆண்டுகளாக கேதார்நாத் கோயில் உள்ளது. இதேபோல் மும்பையிலும் பத்ரிநாத் கோயில் உள்ளது. இதை முன்னாள் (உத்தரகாண்ட்) முதல்வர் ஹரிஷ் ராவத் திறந்துவைத்தார். நாங்கள் முழு மனதுடன் மற்றும் மத நம்பிக்கையுடன் ஒரு கோயிலை உருவாக்குகிறோம். இதில் எந்த சர்ச்சையும் வேண்டாம். அரசியல் ஆதாயத்திற்காக சில தலைவர்கள் சர்ச்சையை உருவாக்குகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படி, டெல்லியில் கேதார்நாத் கோயில் கட்டப்படுவதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கூடியிருக்கும் நிலையில், ”கேதார்நாத்தைப்போல இன்னொரு கோயில் கட்டுவது மிகப் பெரிய மோசடி” என ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”டெல்லியில் கேதார்நாத் சிவன் கோயில் கட்டவே கூடாது. கேதார்நாத் சிவன் கோயில் என்பது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. 12 ஜோதிர்லிங்கங்கள் எவை என்பது குறித்து சிவபுராணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், அவற்றில் ஒன்றான கேதார்நாத்தைப்போல இன்னொரு கோயில் கட்டுவது மிகப்பெரிய மோசடியாகும். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சிவன் கோயிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயமாகி உள்ளன. மும்பையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத தொழிலதிபர் ஒருவர்தான் இந்த தங்க நகைகளைக் கொடுத்தார். 228 கிலோ தங்க நகைகள் மாயம் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை. கேதார்நாத் கோயில் தங்க நகை மோசடி குறித்து யாருமே பேசவில்லையே ஏன்? இதை திசைதிருப்ப இப்போது கேதார்நாத் கோயிலை டெல்லியில் கட்டுகிறார்களா? 228 கிலோ தங்க நகை காணாமல் போனதற்கு யார்தான் பொறுப்பு? டெல்லியில் கேதார்நாத் கோயிலைக் கட்ட ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.