இந்தியா

மாந்திரீகத்தால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: மனதை உறைய வைக்கும் அதிர்ச்சி பின்னணி!

மாந்திரீகத்தால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: மனதை உறைய வைக்கும் அதிர்ச்சி பின்னணி!

EllusamyKarthik

மாந்திரீகத்தின் பெயரில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அச்சிறுமியைக் கொன்று நுரையீரல் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பத்ராஸ் என்ற கிராமத்தில் தன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போனது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதுடன், அவரின் நுரையீரலும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இந்தச் செய்தி, அந்தக் கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன்பின், சிறுமியை கடத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில், அன்குல் மற்றும் பீரான் என்ற இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமி கொலை குறித்த தகவலும், அவரின் நுரையீரல் ஏன் வெட்டி எடுக்கப்பட்டது என்பது தொடர்பான அதிர்ச்சியும் தெரியவந்தது.

அதன்படி, பரசுராம் குரில் என்பவர்தான் இந்தக் கொலை குற்றத்துக்கு மூலகாரணம் என்பது தெரியவந்தது. இந்த பரசுராம் குரிலுக்கு திருமணமாகி நீண்ட வருடங்களாகியும் குழந்தை இல்லை. இதனையடுத்து குழந்தைப் பிறப்பதற்காக மாந்திரீகம் செய்ய நினைத்துள்ளார். அதற்காக, குழந்தையை கொன்று நுரையீரலை எடுப்பதற்கு பரசுராம், அன்குல் மற்றும் பீரானை அணுகியுள்ளார். அவரின் ஆலோசையின்படியே குழந்தையை கடத்திக் கொலை செய்துள்ளனர் இருவரும். மேலும், சிறுமியின் நுரையீரலை வெட்டி எடுத்து, அதை பரசுராமிடம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், வாக்குமூலத்தைச் சேகரித்த போலீஸார், பரசுராம் மற்றும் அவரின் மனைவியை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். குழந்தையை கொலை செய்த விவரம் மற்றும் அவரின் நுரையீரல் கொண்டுவரப்பட்ட விவரங்கள் தெரிந்தும், அதை வெளியில் மறைத்த காரணத்திற்காக போலீஸார் பரசுராமின் மனைவியையும் கைது செய்தனர். 

இது தொடர்பாக பேசியுள்ள உத்தரப் பிரதேச காவல் அதிகாரி ப்ரஜேஷ் ஸ்ரீவட்சவா, ``கொலை விவகாரத்தில், பரசுராம் முதலில் எங்களை ஏமாற்றப் பார்த்தார். வழக்கை திசைதிருப்ப முயன்றார். ஆனால், தொடர் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியிருக்கிறார். 

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும், குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. 

இந்நிலையில், இறந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 5 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்ததோடு, இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.