பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் புதிய தலைமுறை
இந்தியா

”பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை..” - மேற்கு வங்கத்தில் மசோதா நிறைவேற்றம்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்ட மசோதா, மேற்குவங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

PT WEB

புதிய சட்ட மசோதா

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்ட மசோதா, மேற்குவங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பை வழங்கமுடியாத அளவுக்கு சட்டங்களை கொண்டுவராத பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மம்தா பானர்ஜி

உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமையை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் விதமாகவும், பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்கும் வகையிலும் மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய சட்டமசோதா கொண்டுவரப்பட்டது.

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்

மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. அதோடு, பாலியல் வன்கொடுமை வழக்குகளில், முதற்கட்ட விசாரணை அறிக்கை தயாரானதில் இருந்து 21 நாட்களில் விசாரணையை முடிக்க இந்த சட்டமசோதா வழிவகை செய்கிறது.

பரபரப்பான சூழலில் கூடிய மேற்கு வங்க சட்டப்பேரவையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

பெண்களின் பாதுகாப்பை வலுவான சட்டங்களால் உறுதி செய்ய முடியாத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் பிற மாநில முதலமைச்சர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். அதனால்தான் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இந்தச் சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேற்குவங்கத்தில் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில், மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.