செங்கோலுடன் மோடி எக்ஸ் தளம்
இந்தியா

“இது ஜனநாயகத்தின் கோயில்; அரசரின் மாளிகை அல்ல” - செங்கோலை எதிர்க்கும் சமாஜ்வாடி.. கொதித்த பாஜக!

Prakash J

18வது மக்களவையின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்பிறகு நாடு முழுவதும் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து சபாநாயகரான வாக்கெடுப்பில், ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் நிகழ்த்தினார். இதற்கிடையே ”செங்கோலை அகற்ற வேண்டும்” என மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் இருப்பது மன்னராட்சியின் அடையாளம் என்றும், ஜனநாயகத்தைக் காக்க அதனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அரசியல் சாசனம் புத்தகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல” என கடிதம் எழுதியுள்ளார். ஜனநாயகத்திற்கும், செங்கோலுக்கும் என்ன சம்பந்தம் என்று சமாஜ்வாடி கட்சி எம்பி கேள்வி எழுப்பி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:மீண்டும் குப்பைப் பலூன்கள்| தென்கொரியாவுக்குப் பதிலடி கொடுத்த வடகொரியா!

சௌத்ரியின் இந்த கடிதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹசாத் பூனாவல்லா, ”இந்திய கலாசாரத்தை இழிவுபடுத்த சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழகத்தை அவமதிக்கும் செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழகத்திற்கு உரிய மரியாதை கிடைத்து வருவதை சமாஜ்வாதி கட்சி எதிர்க்கிறது. இவர்கள் வெளிப்படையாக இந்திய மற்றும் தமிழ் கலாசாரத்தை அவமதிக்கிறார்கள்” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த விவகாரம் பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், எக்ஸ் வலைதளத்தில் தமிழில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ”இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது.

குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDIA கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. 'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:ஆந்திராவில் சோகம்| கடித்த வளர்ப்பு நாய்.. ரேபிஸ் நோய் பரவியதில் தந்தை, மகன் பரிதாப உயிரிழப்பு!

இந்த நிலையில், செங்கோலை அகற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர். அதன் அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்படும் என பாஜக எம்பிக்களிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் கொடுக்கப்பட்டு, நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் வைக்கப்பட்டது. அப்போதும் செங்கோல் பற்றிய கருத்துகள் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதையும் படிக்க: ”ஒருத்தருக்கு சார்பா நடக்குதா”-ரிசர்வ் டே ஏன் இல்லை? விமர்சனத்தை சந்திக்கும் 2வது அரையிறுதி போட்டி!