இந்தியா

‘வெஸ்ட் நைல் வைரஸ்’ தாக்கி கேரளச் சிறுவன் உயிரிழப்பு

‘வெஸ்ட் நைல் வைரஸ்’ தாக்கி கேரளச் சிறுவன் உயிரிழப்பு

rajakannan

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கியிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் முகமது ஷான் வெஸ்ட் நைல் வைரஸால் தாக்கப்பட்டிருந்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது. கோழிக்கோட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைரஸ் தாக்கியது சோதனை மூலம் உறுதியானது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ தாக்கியிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, வடக்கு மலபார் பகுதிகளில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுவரை வேறு யாரும் இந்த வைரசினால் தாக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பறவைகளிலிருந்து கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் தாக்கினால், சளி, காய்ச்சல், தலைவலி, சோர்வு மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த வைரஸ் தாக்கினால் மூளைக்காய்ச்சல்  வரும் அபாயம் உள்ளது. வட அமெரிக்காவில் இத்தகைய நோயின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். 

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், “யாரும் பீதி அடையத் தேவையில்லை. வெஸ்ட் நைல் வைரஸால் தாக்கப்பட்ட சிறுவன் கடந்த 10 நாட்களாக தனி வார்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்தான். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார். 

அதேபோல், மாநில சுகாதாரத்துறை இயக்குநர் நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், அனைத்து மருத்துவமனைகளையும் உஷார் படுத்துமாறு எச்சரித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.