கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது வருகிறது. பாஜக ஆட்சிக்கு வித்திட்டவர்கள் 17 எம்.எல்.ஏ-க்கள். காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியைச் சேர்ந்த இந்த 17 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய, அதனால் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதன்பின் இவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றனர். இவர்களின் பெரும்பாலோனோர் காலியாக இருக்கும் 7 அமைச்சரவை இடங்களை குறிவைத்து காய்களை நகர்த்தினர். அமைச்சர் பதவி கேட்டு எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
ஆனால், பாஜக டெல்லி தலைமை அதற்கு செவிமடுக்கவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு சமீபத்தில்தான் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தது. அதன்படி, இன்று மாநில அமைச்சரவையில் சேர்க்கப்படும் அமைச்சர்களின் பட்டியலை அறிவித்தார் எடியூரப்பா. இவர்களின் பதவிப் பிரமாணம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. ஹுக்கேரி சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் கட்டி, பில்கி எம்.எல்.ஏ முருகேஷ் நிரானி, சட்டமன்ற சபை உறுப்பினர்கள் எம்டிபி நாகராஜு, சிபி யோகீஷ்வர் மற்றும் ஆர்.சங்கர் அல்லது பெண்டுலம் சங்கர், மகாதேவபுரா எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பவல்லி மற்றும் சல்லியா எம்.எல்.ஏ எஸ் அனகாரா ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்கவுள்ளனர்.
பாஜக இவர்களை தேர்வு செய்தது ஏன்?
முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய நண்பர் ஹுக்கேரி சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் கட்டி. பாஜக ஆட்சிக்கு வந்தபோதே அமைச்சரவையில் இவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அதிருப்தியின் உச்சியில் இருந்த உமேஷ் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த தலைவர்களுடன் பல சுற்று சந்திப்புகளை நிகழ்த்தி தன்னுடைய பலத்தை காண்பிக்க தீர்மானித்தார். இந்த விஷயம் எடியூரப்பாவுக்கு தெரியவர, அந்த நேரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும்போது உமேஷ் கட்டிக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று பகிரங்கமாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படியே இப்போது அவர் அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த நிரணி சர்க்கரை குழுமத்தின் தலைவருமான முருகேஷ் நிரானியும் அமைச்சரவையில் இடம்பெற இருக்கிறார். பஞ்சமாஷாலி லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஆகஸ்ட் 2019 இல் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது அமைச்சர் பதவி வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்த வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் முருகேஷ் நிரானியும் ஒருவர்.
2020 ஜனவரியில், பஞ்சமாஷாலி குரு வச்சானந்தா சுவாமி, முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்காவிட்டால் லிங்காயத் சமூகம் உங்களுக்கு எதிராகத் திரும்பும் என்று எடியூரப்பாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்ததிலிருந்தே, நிரானியை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து எடியூரப்பாவும் மேல்மட்ட தலைவர்களும் பேசி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. லிங்காயத் சமூகம் பாஜகவுக்கு எதிராக மாறும் என்ற அச்சம் இருந்தது, லிங்காயத் சமூகம் பாஜகவின் முதன்மை வாக்கு வங்கியாக இருக்கிறது. இதனால் நிரானி பெயரை பெயரை முதல்வர் டெல்லி தலைமையிடம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
இதேபோல், எம்.எல்.சி.க்கள் எம்டிபி நாகராஜு, பெண்டுலம் ஷங்கர் மற்றும் சிபி யோகீஷ்வர் ஆகியோருக்கு 2019 ஆம் ஆண்டில் வாக்குறுதியளித்தபடி அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து வெளியேறி கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்த உதவிய 17 எம்எல்ஏக்களில் எம்டிபி நாகராஜு மற்றும் ஆர் சங்கர் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். அந்த நேரத்தில் பாஜக தலைவர்களுக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு சிபி யோகீஷ்வர் வசதி செய்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், ராஜராஜேஸ்வரி நகர் எம்.எல்.ஏ முனிரத்னா நாயுடுவை அமைச்சரவையில் இருந்து விலக்கி வைத்து, அதற்கு பதிலாக அரவிந்த் லிம்பாவலியை அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்துள்ளது பாஜக. முனிரத்னா மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவருக்கு பதவி வழங்க பாஜக மத்திய தலைமை விரும்பவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதிநிதியாக ஒரு மந்திரி வரவேண்டும் என்ற அடிப்படையில் சல்லியா எம்.எல்.ஏ எஸ்.அனகாரா அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.