குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றாததற்கு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கக் கோரும் பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் ஏற்கெனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 100-க்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்பு POCSO நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இத்தகைய நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படாததை நீதிபதிகள் கடும் கோபத்துடன் சுட்டிக்காட்டினர். இதுகுறித்து அனைத்து மாநில அரசுகள் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டு இவ்வளவு நாட்களாகியும் ஏன் இன்னும் அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினர். வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திருக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கு ஆணையிட்டனர். குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகள் 300-க்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.