இந்தியா

'உலகில் போர்களை தடுக்க மோடி தலைமையில் குழு அமைக்கலாம்' – மெக்சிகோ அதிபர் யோசனை

JustinDurai

உலகில் போர்களை நிறுத்த பிரதமர் மோடி உள்ளிட்ட மூன்று உலகத் தலைவர்களைக் கொண்ட ஆணையத்தை உருவாக்க வேண்டும் என மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் யோசனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 5 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. அதேபோல் சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சி நடத்தி உள்ளது.  இப்படியாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் போர் பதற்ற சூழல், உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக ஒற்றுமை விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றனர்.   

இந்தச் சூழலில் அடுத்த 5 வருடங்களுக்கு உலகில் எந்தவொரு போரும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூன்று உலகத் தலைவர்களைக் கொண்ட ஆணையத்தை உருவாக்கும் திட்டத்தை ஐ.நா.விடம் முன்மொழிய உள்ளதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "போரால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமாக உள்ளது. இதனால், குறைந்தது அடுத்த 5 வருடங்களுக்குப் போர் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலான ஒப்பந்தத்தைக் கொண்டு வர வேண்டும். இதற்காகச் சர்வதேச தலைவர்களைக் கொண்ட ஒரு ஆணையத்தை நாம் அமைக்க வேண்டும். இந்த உயர்மட்ட ஆணையத்தில் போப் பிரான்சிஸ், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடம்பெற வேண்டும்.

அவர்கள் மூவரும் உலகெங்கும் போரை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும். அப்போது தான் உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியும்'' என்று அவர் தெரிவித்தார். மேலும், அவர் போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: டெஸ்லா நிறுவனத்தின் ரூ. 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை