இந்தியா

2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?

2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?

webteam

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தியைக் கூட்டுவதற்கு சீரம் இன்ஸ்டியூட், பாரத் பயோடெக் முயற்சி ஆகிய நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய சூழலில், போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு கொரோனா அதிதீவிர பரவல் காரணமாக தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கபட்டு, விநியோகத்திற்கு வந்த முதல் 5 கோடி தடுப்பூசிகளில் 50 லட்சம் மட்டுமே பாரத் பையோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின். மீதமுள்ள 9.5 கோடி சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிகள் என்பதை கொண்டு உற்பத்தி
நிலவரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

விரைவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகளின் தகவல்படி ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டுவர தனியார் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள், இந்தியாவில் எத்தனை தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் கொண்டனவாக இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவின் முதல் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான பரிசோதனைகள் நடந்தபோது, கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்படுத்திய அச்சம் காரணமாக, தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என பெரும்பாலானோர் ஆவலுடன்
இருந்தனர். பின்னர் சென்ற வருட இறுதியிலும், இந்த வருட ஆரம்பத்திலும் கொரோனா வைரஸ் பரவல் குறைவாக இருந்ததால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிக ஆர்வத்துடன் மக்கள் முன்வரவில்லை. இந்த சமயத்தில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே கட்டுக்குள் வைத்திருந்தனர்.

தற்போது இரண்டாவது அலை புயல்போல வேகம் பெற்று வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக அளவிலேயே பொதுமக்கள் முன்வருகிறார்கள் என்பதாலும், தடுப்பூசி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி இருப்பதாலும், தேவை அதிகரித்துள்ளது.
சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவை பொறுத்தவரை, மாதத்துக்கு 6.5 கோடி தடுப்பூசிகள் வரை அந்த நிறுவனம் தயாரிக்கும் திறன்
கொண்டது என கணக்கிடப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரித்து, மாதத்துக்கு 10 கோடி வரை தயாரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகவோ அல்லது 250 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றாலும், இதை தயாரிக்க அதிக செலவாகிறது என்றும், ஆனால் அரசின் கோரிக்கைப்படி குறைக்கப்பட்ட விலையில் இந்தத் தடுப்பூசி விநியோகிக்கப்படுகிறது என்றும் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆகவேதான் மத்திய அரசிடம் ரூ.3,000 கோடி மானியம் கேட்டு இருப்பதாகவும், அந்த மானியத்தை உபயோகித்து புதிதாக தொழிற்சாலையை உருவாக்கி, அதன் மூலம் அதிக அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யலாம் என அந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிறுவனம் ஏற்கெனவே பல்வேறு தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. பாம்புக்கடியிலிருந்து தொடங்கி மீசல்ஸ், டிப்தீரியா,
டெட்டனஸ், ஹெப்பாடிட்டீஸ் போன்ற உபாதைகளுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கிறது சீரம் இந்தியா. ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனம் 1.5 பில்லியன் தடுப்பூசிகளை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பிற தடுப்பூசிகளின் உற்பத்தியை ஓரளவுக்கு குறைத்து, கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு சீரம் இந்தியாவுக்கு இருக்கிறது. இதைத்தவிர இந்தியாவின் மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக ஒப்புதல் பெறவுள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் மூலம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தவிர மூக்கு வழியாக சொட்டு மருந்து போல் அளிக்கக்கூடிய இன்னொரு தடுப்பு மருந்தையும் ஒப்பந்த அனுமதி மூலம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை தற்போது சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா செய்து கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இதுவரை குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 40 லட்சம் தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த நிறுவனம் தன்னுடைய உற்பத்தித் திறனை அதிகரிக்க தற்போது முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்திலேயே கிட்டத்தட்ட 10 கோடி வரை கோவாக்சின் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள்.

இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாடு மற்றும் யாரெல்லாம் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. முதல் கட்டத்திலேயே மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள்; இரண்டாவது கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்; தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று பல்வேறு பிரிவுகளாக பயனாளர்களின் தகுதியை அரசு
நிர்ணயித்து வருகிறது. அதேபோலவே மாநிலங்கள் எவ்வளவு தடுப்பூசி பயன்படுத்துகின்றன என்பதை பொருத்து, விநியோக அளவுகளையும் மத்திய அரசு முடிவு செய்கிறது. தடுப்பூசிகள் வீணாக்கக் கூடாது என்பதற்காக இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்றும், அதேசமயத்தில் யாருக்கெல்லாம் முன்னுரிமைபடி தடுப்பூசி அளிக்கப்பட்டால் வைரஸ் பரவல் குறையும் என்பதையும் மனதில் கொண்டே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகவேதான் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது கூட, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தங்களுடைய உற்பத்தி திறன் என்ன என்பது குறித்த இறுதியான விவரங்களை தாக்கல் செய்யவில்லை. ஆகவே, ஒருபக்கம் அரசு கட்டுப்பாடுகள் மற்றும் இன்னொரு பக்கம் உற்பத்தித் திறனை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள்
உள்ளதால், தேவைக்கு ஏற்றபடி இந்தியாவிலே கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

- கணபதி சுப்ரமணியம்