இந்தியா

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை : 20வது வழக்கிலும் ‘சயனைடு’ மோகன் குற்றவாளி

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை : 20வது வழக்கிலும் ‘சயனைடு’ மோகன் குற்றவாளி

webteam

2009 ஆம் ஆண்டு கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சயனைடு மோகன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

20 பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக மோகன் குமார் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது, சயனைடு கொடுத்துக் கொன்றது சம்பந்தமான வழக்கு மங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 19 வழக்குகளின் விசாரணை முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 20ஆவது வழக்கின் தண்டனை விவரம் ஜூன் 24ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய வழக்குகளில் 5 மரண தண்டனைகளும் 3 ஆயுள் தண்டனைகளும் வழங்கப்பட்டன. பின்னர், 2 மரண தண்டனைகள் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டன. 

முன்னதாக, 2009 ஆம் ஆண்டு காசர்கோடு நகரில் உள்ள பெண்கள் விடுதியில் சமையல்காரராக பணிபுரிந்து வந்த 25 வயது இளம்பெண் மோகனுடன் பழகியுள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக மோகன் உறுதியளித்துள்ளார். இதனால் ௨௦௦௯ ஜூலை 8 அன்று, அந்தப் பெண் சுள்ளியாவில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். 

பின்னர், மோகன், அந்தப் பெண்ணை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு தொலைபேசி செய்தபோது, அவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் விரைவில் வீடு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். மோகன் அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அடுத்த நாள் பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு சயனைடு தடவிய மாத்திரையைக் கருத்தடை மாத்திரை எனக்கூறி மோகன் அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதை நம்பி உட்கொண்ட அந்தப் பெண் அங்கேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அப்போது இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் 2009 இல் மோகன் கைது செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவரின் சகோதரி, அவரது படங்களைப் பார்த்து, அவரை அடையாளம் கண்டு புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.