இந்தியா

மதிப்பெண் குறைவாக எடுத்தால் தனி சீருடை... கேரளாவில் கிளம்பிய சர்ச்சை

webteam

கேரளா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு தனி சீருடை கொடுத்திருப்பது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அல் பரூக் என்ற தனியார் பள்ளியில், மாணவர்களின் செயல்திறனை அதிகப்படுத்துவதாக கூறி, பள்ளியில் வினோதமான சீருடை முறை இந்த கல்வியாண்டு முதல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு வெள்ளை நிற சீருடையும், சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு சிவப்பு நிற சீருடையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் சராசரி மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வளரும் என்று அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு பெற்றோர்கள் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக கூறினர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் அமைப்பு அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. 

இந்த நடைமுறையின் மூலம் மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும். இது அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார். மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்பதை யோசிக்காமல் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக குழந்தைகள் உதவி மையத்தின் மாவட்ட ஒருங்கமைப்பாளர் அன்வர் கரகடன் தெரிவித்தார். சுமார் 900 மாணவர்கள் பயிலும் இந்த உயர்நிலைப் பள்ளியில் நிலவிவரும் இந்த இரட்டை சீருடை நடைமுறை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த வினோத சீருடை முறை மாற்றப்படும் என அல் பரூக் நிறுவனம் தெரிவித்துள்ளது.