பங்குச்சந்தை புதிய தலைமுறை
இந்தியா

பட்ஜெட்க்கு பிறகு சரிவை சந்தித்த பங்குச்சந்தை; LTCG வரி உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம்

Jayashree A

2024 - 2025 வது பட்ஜெட் அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பங்குதாரர்கள் காத்திருந்தனர். பங்குச்சந்தையும் இன்று தொடக்கத்தில் நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 24,568.90 என்று வர்த்தகம் ஆரம்பித்தது. சென்செக்ஸூம் 200 புள்ளிகள் அதிகரித்து 80,724 புள்ளிகளில் இருந்தபோது வர்த்தகமானது ஆரம்பித்தது. அதேபோல் பாங்க் நிப்டியானது 300 புள்ளிகள் அதிகரித்து 52,511 புள்ளிகளில் வர்த்தகமாக ஆரம்பித்தது.

பங்குச்சந்தை

இந்நிலையில்தான் காலை 11 மணியளவில், 2024-2025 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிர்மலா சீத்தாராமன் உரையை படிக்க ஆரம்பித்தார். அதில் (LTCG) வரி விதிப்பில் மாற்றத்தை அறிவித்தார் அவர். இதையடுத்து பங்குச்சந்தையானது சில நிமிடங்களிலேயே தொடர் சரிவை சந்திக்கத் தொடங்கியது.

அதன்படி சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 79,400 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி 400 புள்ளிகள் சரிந்து 24,220 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பாங்க் நிப்டி 500 புள்ளிகள் சரிந்து 51,780 ல் வர்த்தகமாகி வருகிறது.

பங்குகள் சரிவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக எல்டிசிஜி வரி (LTCG long term capital gain tax) 12.5% அதிகரிப்பு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

எல்டிசிஜி வரி அதிகரிப்பால் முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற்று வருவதால் இன்று பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி முதலீட்டாளருக்கு இந்த பட்ஜெட் கடினமானது என்றும் கூறப்படுகிறது.