இந்தியா

பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம் - சென்செக்ஸ் 806 புள்ளிகள் சரிந்தது

பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம் - சென்செக்ஸ் 806 புள்ளிகள் சரிந்தது

rajakannan

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காளையை அடக்கி கரடியின் ஆதிக்கம் தொடர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் சரிவடைந்த நிலையில், இன்றைய வணிகத்தில் 806 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு,‌ 35 ஆயிரத்து 169 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி ‌259 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 599 புள்ளிகளானது. இதன்மூலம், சென்செக்ஸ் தனது வரலாற்றில் 13ஆவது மிகப் பெரிய ‌வீழ்ச்சியை சந்தித்தது. 

கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, மிகப் பெரிய சரிவு இன்று ஏற்பட்டது. பெரும்பாலான துறைகளின் பங்குகள் விலை சரிவு கண்டது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சந்தா கோச்சர் விலகிய நிலையில், அவ்வங்கிப் பங்கு விலை 5 சதவிகிதம் குறைந்தது. சர்வதேச சந்தைகளின் சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை பங்குச் சந்தைகள் சரியக் காரணமாகின.

தங்கத்தைப் பொருத்தவரை, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 974 ரூபாய்க்கும், ஒரு சவரன் 16 ரூபாய் குறைந்து 23 ஆயிரத்து 792 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி 10 காசு குறைந்து ஒரு கிராம் 41 ரூபாய் 50 காசாக இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்து ஒரு பேர‌ல் 86 அமெரிக்க டாலரானது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 40 காசு சரிந்து ஒரு டாலர் 73 ரூபாய் 77 காசானது. அதேபோல், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ2.5 குறைத்ததும் பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.