சித்தராமையா PT DESK
இந்தியா

மீண்டும் முதல்வராகும் முனைப்பில் சித்தராமையா? அரசியல் பின்னணி இதுதான்!

அடிப்படையில் சித்தராமையா ஒரு வழக்கறிஞர். 1968ம் ஆண்டு மைசூரின் சீனியர் வழக்கறிஞர் சிக்கபோரையாவிடம் ஜூனியராக சேர்ந்தார் அவர்.

PT WEB

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடித்திருக்கும் காங்கிரஸ், அடுத்த முதல்வர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் போட்டியில் முன்னணியில் இருக்கும் அக்கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம்...

அடிப்படையில் சித்தராமையா ஒரு வழக்கறிஞர் ஆவார்.

* 1968ம் ஆண்டு மைசூரின் சீனியர் வழக்கறிஞர் சிக்கபோரையாவிடம் ஜூனியராக சேர்ந்தார் இவர். பின்னர் சட்டக் கல்லூரியில் சட்ட பேராசிரியராகவும் சில காலம் பணியாற்றினார்.

* 1978 ஆம் ஆண்டு சித்தராமையாவுக்கு மைசூரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் நஞ்சுண்டசாமியுடன் தொடர்பு ஏற்பட்டது. சித்தராமையாவை தேர்தலில் போட்டியிட நஞ்சுண்டசாமி தான் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. பின்னர் மைசூர் தாலுகா தேர்தலில் வெற்றி பெற்றார் சித்தராமையா.

சித்தராமையா

* அதையடுத்து 1983ல் சாமுண்டேஸ்வரி தொகுதியில் பாரதிய லோக்தள் கட்சி சார்பில் போட்டியிட்டு கர்நாடக சட்டபசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1985 ஆம் ஆண்டு இடைத் தேர்தலில் போட்டியிட்டு சித்தராமையா, அதே தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கால்நடைத் துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றார்.

* 1989இல் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராஜசேகர மூர்த்தியிடம் தோல்வியைத் தழுவினார் சித்தராமையா.

* 1992ல் ஜனதா தள செயலாளராக நியமிக்கப்பட்டார் சித்தராமையா.

* 1994ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

* 1996ல் ஜே.எச். படேல் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராக பதவியேற்றார்.

* 1999ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த சித்தராமையா, பின்பு 2004 ஆண்டு கர்நாடக துணை முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார்.

சித்தராமையா

* 2005ல் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சித்தராமையா.

* 2006 ல் டிசம்பரில் நடந்த சாமுண்டேஸ்வரி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார். மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் சிவபசப்பாவை வெறும் 257 வாக்குகளில் வீழ்த்தினார் சித்தராமையா.

* 2008ல் வருணா சட்டசபைத் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013ஆம் ஆண்டு கர்நாடகத்தின் 22வது முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா.

* 2018 வரை முதல்வராக நீடித்தார். 1977ம் ஆண்டுக்குப் பிறகு முதல்வர் பதவியை முழுமையாக நீடித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா என்பது குறிப்பிடத்தக்கது.

* பின்பு 2018-ல் வருணா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார் சித்தராமையா. முதலமைச்சராக இருந்த காலத்தில் ஏழைகளின் நலனுக்கான அவரது பல திட்டங்கள் மிகவும் பாராட்டப்பட்டன. குறிப்பாக ஏழு கிலோ அரிசி வழங்கிய அன்ன பாக்ய யோஜனா, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு 150 கிராம் பால், இந்திரா கேன்டீன் ஆகியவை இவற்றில் அடங்கும்.