இந்தியா

தாத்தா, பாட்டிகளுக்கு கவலை இல்லை: டெல்லியில் வீடு தேடிவரும் மருத்துவ சேவை

webteam

புதுடெல்லியில் உள்ள ஆயிரக்கணக்கான முதியோர்கள் பயன்பெறும் நோக்கில் மனநல மருத்துவர்கள், மருத்துவர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் நிர்வாக உதவிகளை வீடு தேடிவந்து அளிக்கும் சேவைத் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதற்காக ஒரு பிரத்யேக சேவை மையத்தைத் தொடங்கவுள்ளனர்.

இந்த முயற்சி டெல்லியில் வசிக்கும் ஏறக்குறைய 60,000 முதியோர்களுக்கு உதவும் நோக்கில் செய்யப்படுகிறது. இதுபற்றிய தகவலை டெல்லி மாவட்ட அதிகாரி மருத்துவர் நிதின் சாக்யா தெரிவித்தார். மருத்துவ உதவிகள், உளவியல் ஆலோசனைகளுக்காக 1800 111 323 என்ற ஹெல்ப்லைன் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

முதியோர்களுக்கு மருத்துவ உதவிகள் மட்டுமல்ல, கேரம், செஸ் போன்ற விளையாட்டு வசதிகளும் ஏற்படுத்தப்படும். "கொரோனா காலத்தில் அவர்கள் வீட்டில் முடங்கியிருப்பதால், அவர்களுக்குத் தேவைப்படும் மனநல, மருத்துவ மற்றும் சட்ட உதவிகளைச் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தனி குழுக்களை அமைத்துள்ளது" என்கிறார் சாக்கியா.

டெல்லி மாவட்டம் முழுவதும் 500 கிளப்கள் அமைக்கப்படவுள்ளன. அவற்றை அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு நல சங்கங்களுடன் பேசிவருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 100 முதியோர்களில் 43 பேர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.