வினோத் தாவ்டே. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | பணம் விநியோக குற்றச்சாட்டு.. ரூ.100 கோடி கேட்டு ராகுலுக்கு பாஜக அவதூறு நோட்டீஸ்!

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாகக் கூறிய குற்றச்சாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, சுப்ரியா ஷிரினேட் ஆகியோருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஒரேகட்டமாக 288 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவில் 66.05 வாக்குகள் பதிவாகி உள்ளன. நாளை (நவ.23) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக, பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் ஹிதேந்திர தாக்கூர், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே பணம் விநியோகித்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தாக்கூர், "பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வாக்காளர்களுக்கு செல்வாக்கு செலுத்துவதற்காக விரார் நகருக்கு 5 கோடி ரூபாய் வழங்குவதாக சில பாஜக தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவரைப் போன்ற ஒரு தேசிய தலைவர் இதுபோன்ற அற்ப செயலில் இறங்கமாட்டார் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் அவரை இங்கு பார்த்தேன், அவர் மீதும் பாஜக மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| தவறான கருத்துக்கணிப்பா? ஹரியானாவைப்போல் மாற வாய்ப்பு? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாஜக அப்போதே மறுத்திருந்தது. மேலும் பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. தாக்கூரின் குற்றச்சாட்டுக்குப் பிறகு கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மோடிஜி, இந்த 5 கோடி ரூபாய் யாருடைய பாதுகாப்பு மூலம் வந்தது? பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்து உங்களை டெம்போவில் ஏற்றி அனுப்பியது யார்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கவேவும் இதுதொடர்பாக பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த வினோத் தாவ்டே, “சிசிடிவி காட்சிகளைப் பார்த்து, அங்கு நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை முழுவதுமாகப் பார்த்து, பணம் எப்படி வந்தது என்பதை நிரூபிக்கவும். எந்த தகவலும் இல்லாமல் இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது குழந்தைத்தனம் இல்லை என்றால், அதற்குப் பெயர் வேறு என்ன” என ராகுலுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாகக் கூறிய குற்றச்சாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் ஆகியோருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், அவர்கள் மூவரும் மூன்று மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தாவ்டேவின் வழக்கறிஞர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அப்படி இல்லையெனில், அவதூறு கருத்தைக் கூறியதற்காக அவர்களிடமிருந்து ரூ.100 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த நோட்டீஸில், ’தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. தவறான நோக்கத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுத்தாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மூன்று காங்கிரஸ் தலைவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், ரூ.100 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| நாளை வாக்கு எண்ணிக்கை..போலீஸ் அதிரடி உத்தரவு.. அஜித் பவாரை முதல்வராக சித்தரித்து பேனர்!