இந்தியா

ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் கொடுத்து உதவும் நடிகர் சோனு சூட்..!

ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் கொடுத்து உதவும் நடிகர் சோனு சூட்..!

webteam

ஆந்திராவில் நிலத்தை உழவு செய்வதற்கு தன்  சொந்த மகள்களைக் கட்டாயப்படுத்திய விவசாயி ஒருவரின் செயல் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில்  சனிக்கிழமையன்று வெளியான அந்த வீடியோ பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதைக் கண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட், அந்த விவசாயிகளுக்கு உழுவதற்கு எருதுகளை அனுப்பலாம் என்று காலையில் தெரிவித்திருந்தார். உடனே அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டு, அவர்களுக்கு டிராக்டர் ஒன்றை அனுப்பி வைக்கலாம் என ரீடிவிட் செய்துள்ளார்.    

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த விவசாயிக்கு மாடுகளைக் கொண்டு உழுவதற்கு போதுமான பண  வசதியில்லை. ஊரடங்கு காரணமாக வருமானமும் குறைந்துவிட்டது. கையில் அரைக்காசு இல்லாமல் தவித்த விவசாயி, தன் மகள்களைக் கட்டாயப்படுத்தி உழ வைத்தார். நகரத்தில் அவர் நடத்திவந்த டீக்கடையை ஊரடங்கு காரணமாக மூடும் நிலை ஏற்பட்டதால், பிழைப்பதற்காக சொந்த ஊருக்கே  திரும்பிவிட்டார்.

அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்த நடிகர் சோனு சூட், “நாளை காலையில் அவர்களுக்கு உழவு மாடுகள் கிடைத்துவிடும். நாளை முதல் இரு மாடுகளும் நிலத்தை உழட்டும். மகள்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும். விவசாயிகள் நம் நாட்டின் பெருமை” என்று கூறியிருந்தார்.  

மாலையில் ரீடிவிட் செய்த சோனு, “அவர்கள் டிராக்டர் வைத்துக்கொள்ள தகுதியானவர்கள். அவர்களுக்கு ஒரு டிராக்டர் அனுப்ப உள்ளேன்” என்று பதிவிட்டு டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தையும் சேர்த்து ஹேஷ்டேக் உருவாக்கினார். ரசிகர்கள் பலரும் அவரது உதவும் உள்ளத்தைப் பாராட்டி வருகின்றனர்.