இந்தியா

போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் இல்லையென்றாலும் கவலையில்லை: பிரிவினைவாத தலைவர்கள் அறிக்கை

போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் இல்லையென்றாலும் கவலையில்லை: பிரிவினைவாத தலைவர்கள் அறிக்கை

webteam

போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் இல்லையென்றாலும் கவலையில்லை என்று பிரிவினைவாத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  இந்தக் கொடூர தாக்குதலை, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கம் நடத்தியதாக ஒப்புக்கொண்டது. 

இதைத்தொடர்ந்து காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிடம் இருந்து நிதி பெறுபவர்களுக்கான பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரிவினைவாத தலைவர்களான மீர்வாய்ஜ் உமர் பரூக், ஷபீர் ஷா, அப்துல் கனி பட், பிலால் லோன் மற்றும் ஹாசிம் குரேஷி ஆகிய 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற, காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று மாலையிலருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட, அனைத்து பாதுகாப்பும் வாகனங்களும் திரும்ப பெறப்பட்டது. 

இதுகுறித்து அறிக்கை ஒன்றை மீர்வாய்ஜ் உமர் பரூக் தலைமயிலான  All parties Hurriyat Conference(APHC) வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே ஹுரியத் தலைவர்களுக்கு வழங்கி வந்த போலிஸ் பாதுகாப்பு குறித்து  சில பத்திரிகையாளர்கள் அரசியலாக்கி வந்தனர். இந்தப் பாதுகாப்பால் காஷ்மீர் விவகாரத்தில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை. அதனால் இந்த போலீஸ் பாதுகாப்பு ஹுரியத் தலைவர்கள் வீடுகளின் முன் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளது.

மேலும் “ஹுரியத் தலைவர்கள் யாரும் இந்தப் பாதுகாப்பை கேட்கவில்லை. இதை காஷ்மீர் அரசு தான் அவர்களுக்கு இருந்து வந்த அச்சுறுத்தலால் அளித்துவந்தது. ஹுரியத் தலைவர்கள் இதை அரசு எப்போது வேண்டுமானலும் நீக்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர்”என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக  அப்துல் கனி பட் “எனக்கு காஷ்மீர் அரசு தான் பாதுகாப்பு அளித்தது. நான் பாதுகாப்பு கேட்டு காஷ்மீர் அரசிடம் முறையிடவில்லை. எனது பாதுகாப்பிற்கு எப்போதுமே காஷ்மீர் மக்கள் உள்ளனர். பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் போர் நடைபெற வாய்ப்பு உள்ளது. முதலில் இந்திய அரசு அதை கவனிக்கவேண்டும்”எனக் கூறினார்.