சல்மான் கான், பாபா சித்திக் pt web
இந்தியா

ஒரு மாதகால திட்டம்.. பாபா சித்திக் கொலையில் அதிர்ச்சி தகவல்கள்.. சல்மான்கான் வீட்டுக்கு பாதுகாப்பு

PT WEB

செய்தியாளர் - ராஜீவ்

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக், மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவர். நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாபா சித்திக் கொலையில் சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபா சித்திக்

சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் நெருக்கமாக பழகியவர் பாபா சித்திக். குறிப்பாக சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சல்மான் கான் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாபா சித்திக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தற்போது சிறையில் உள்ள பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் என்று விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மூன்றாவது குற்றவாளியை கண்டறிந்துள்ள காவல்துறை, அவரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்துள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் எவ்வாறு பாபா சித்திக் கொலைக்கு தொடர்புடையவர் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை தொடங்கியது.

இதற்கிடையில் கொலை குற்றவாளிகள், கடந்த ஒரு மாத காலமாக குர்லா பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்ததாக தெரிகிறது. மூன்று பேருக்கும் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் இது நன்கு திட்டமிடப்பட்ட கொலை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சல்மான் கான் இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சல்மான் கானுக்கு ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு சல்மான்கானை குறி வைக்கும் விதம் சல்மானின் இல்லத்திற்கு வெளியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, இருப்பினும் அவர் பாதுகாப்பாக உள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாபா சித்திக் கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது மாநில அரசு. பாபா சித்திக்கின் உடல் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று, இரவு 8:30 மணிக்கு, மும்பை கோட்டத்தில் உள்ள படா கப்ரஸ்தானில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும்.

பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கண்டத்தை தெரிவித்துள்ளார்.