ரயில் விபத்துகள் தொடர் கதையாகியுள்ள நிலையில் ரயில் பயணங்களை பாதுகாப்பு மிக்கவையாக மாற்றும் சவால் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா.. ஆந்திரா... மேற்கு வங்கம் என ரயில் விபத்துகள் தொடர் நிகழ்வுகளாகியுள்ளன. அதே நேரம் வந்தேபாரத் ரயில்கள் அறிமுகம் என்பது போன்ற செய்திகளையும் அடிக்கடி காண முடிகிறது. புதிய ரயில்கள் தேவைதான் என்றாலும் அதை விட பாதுகாப்புதான் பிரதானம் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம்.
சுமார் 1,26,000 கிலோ மீட்டர் நீளமுள்ள நீண்ட நெடிய பாதையை மிகவும் பாதுகாப்பானதாக கட்டிக்காப்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இதற்கு மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. குறிப்பாக ரயில் விபத்துகளை தவிர்க்க உதவும் கவச் தொழில்நுட்பத்தை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்க 50 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக தகவல்கள் உள்ளன. இவை ஒரு புறம் இருக்க ரயில் ஓட்டுநர்களுக்கான பணிச்சுமை விபத்துகளுக்கு காரணமாவதாக தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ரயில்வேயில் போதிய பணியாளர்கள் இல்லாததால் இருப்பவர்ளை வைத்து அதிகம் வேலை செய்ய வைக்கும் அவலம் அரங்கேறுகிறது. தற்போதைய சூழலில் 2 லட்சத்து 74 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பணியிடங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த சூழலில் பணியாளர்களுக்கு பணி நேர வரம்பை உறுதிப்படுத்துவதுடன் சிக்னலிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
மேலும் ரயில்வே பட்ஜெட்டை கைவிட்டதும் அதன் மீதான கவனக்குறைவுக்கு ஒரு காரணமாகி விட்டதாவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது. ரயில்கள் குறைந்த கட்டணத்தில் நிறைவான வசதிகளுடன் பயணத்திற்கு பாதை அமைக்கின்றன.
இதை நம்பியே பயணிகள் பலரும் வருகின்றனர். இந்நிலையில் ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதே ரயில்வே அமைச்சகத்தின் தலையாய கடமையாக இருக்கவேண்டும். இதை என்று உணரும் ரயில்வே அமைச்சகம் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.