இந்தியா

ஸ்ரீநகரில் 25 மீட்டர் தொலைவுக்கு ஒரு பாதுகாப்பு படை வீரர் பணி

ஸ்ரீநகரில் 25 மீட்டர் தொலைவுக்கு ஒரு பாதுகாப்பு படை வீரர் பணி

webteam

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் எல்லை பகுதியான ஸ்ரீநகரில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருவதால் 25 மீட்டர் தொலைவுக்கு ஒரு வீரர் என்ற கணக்கில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனையடுத்து இந்தியாவின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் விமானப் படை அத்துமீறுவதை தடுக்கும் வகையில் இந்திய விமானப் படையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் இந்திய அத்துமீறலுக்குத் தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று ஏற்கெனவே அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் குப்வாராவின் பபகுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் அந்தச் சண்டை நடைபெற்றது. அந்தத் தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், பொதுமக்கள் தரப்பிலும் ஒருவர் பலியானார். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்தச் சூழலில் காயமடைந்த சில பயங்கரவாதிகள், சேதமடைந்த கட்டடங்களில் ஒளிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. எனவே ஸ்ரீநகரில் பகுதியில் 25 மீட்டர் தொலைவுக்கு ஒரு வீரர் என்ற கணக்கில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.