ஒடிசா வன்முறை எக்ஸ் தளம்
இந்தியா

ஒடிசா| சாலையில் கொட்டிக் கிடந்த ரத்தம்.. இரு குழுக்களிடம் வெடித்த வன்முறை.. ஊரடங்கு உத்தரவு அமல்!

Prakash J

ஒடிசா மாநிலம் பாலசோர் நகரில் புஜாக்கியா பிர் பகுதி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர், அங்கு விலங்குகளைப் பலியிட்டு, அதன் இரத்தத்தைச் சாலையில் கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதைக் கண்ட இன்னொரு சமூகத்தினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் அமர்ந்து ஈடுபட்டவர்கள் மீது எதிர்தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்புக்குமிடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது தடுக்கச் சென்ற போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: WI vs AFG | ஒரே ஓவரில் 36 ரன்கள்! ஆப்கானை அலறவிட்டு 4 சாதனை பட்டியலில் இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்!

இதனிடையே, ஒடிசாவின் புதிய முதல்வர் மோகன் சரண் மாஜி, பாலசோர் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு, அங்குள்ள கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், இன்று (ஜூன் 18) நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த தடை உத்தரவு காரணமாக, மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கலவரத்தால் பாலசோர் பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. தவிர, கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: T20 WC | வெளியேறிய பாகிஸ்தான்.. நாடு திரும்ப அச்சம்.. ஒரு மாதத்திற்கு எஸ்கேப் ஆகும் 5 வீரர்கள்!