இந்தியா

கொரோனா 2-வது அலை ஜூலை வரையில் செல்லும் - பிரபல வைராலஜிஸ்ட் தகவல்

கொரோனா 2-வது அலை ஜூலை வரையில் செல்லும் - பிரபல வைராலஜிஸ்ட் தகவல்

JustinDurai

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சம் தொட்டுவிட்டதா என்பதை இப்போதே கூறமுடியாது. அனேகமாக ஜூலை வரையில் இந்த இரண்டாவது அலை செல்லும் என்று தெரிவித்துள்ளார் பிரபல வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல்.

பிரபல ஆங்கில நாளிதழ் இணையவழியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிரபல வைராலஜிஸ்ட்டும், ஹரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிரி அறிவியல்கள் நிறுவனத்தின் இயக்குனருமான ஷாகித் ஜமீல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை குறித்து பல முக்கிய தகவல்களை வெளியிட்டார். அதில், ''கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை உச்சம் தொட்டுவிட்டதா என்பதை இப்போதே கூறமுடியாது. கொரோனா பரவல் வளைவு தட்டையாகி இருக்கலாம். ஆனால் உச்சத்தின் மறுபக்கம் எளிதாக கீழே இறங்கி விடாது. அது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம். அனேகமாக ஜூலை வரையில் இந்த இரண்டாவது அலை செல்லும்.

முதல் அலையில் ஒரே சீராக தொற்று பரவல் குறைந்தது. ஆனால் இப்போது ஆரம்பமே பெரிய எண்ணிக்கையில்தான் அமைந்தது. 96 ஆயிரம், 97 ஆயிரம் பேர் பாதிப்புக்கு பதிலாக 4 லட்சத்துக்கு மேலாக பாதிப்புக்குள்ளாகி இந்த அலை தொடங்கி இருக்கிறது. எனவே இது இன்னும் அதிக நேரம் எடுக்கும். இந்தியாவில் கொரோனாவின் உண்மையான இறப்பு விகிதம் தவறானது. இரண்டாவது அலை உருவாக தேர்தல் பரப்புரை கூட்டங்களும், மத திருவிழாக்களும்தான் காரணம்'' என்று கூறினார்.