ஹிண்டன்பர்க்  முகநூல்
இந்தியா

தன்மீதான குற்றச்சாட்டுகளை தெளிவுப்படுத்த பொதுவிசாரணைக்கு தயாரா? - கேள்வி எழுப்பிய ஹிண்டன்பர்க்!

தன்மீதான குற்றச்சாட்டுகளை தெளிவுப்படுத்த பொதுவிசாரணைக்கு தயாரா என செபி அமைப்பின் தலைவர் மாதவிக்கு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

PT WEB

தன்மீதான குற்றச்சாட்டுகளை தெளிவுப்படுத்த பொதுவிசாரணைக்கு தயாரா என செபி அமைப்பின் தலைவர் மாதவிக்கு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதானி குழுமத்துக்கு தொடர்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தாவல் புச் முதலீடு செய்துள்ளதாகவும், இதனால் அதானி குழுமத்திற்கு எதிரான புகார்களை செபி அமைப்பு முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் முன்வைத்தது.

இந்த விவகாரம் இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய வேளையில், ஹிண்டன்பர்க் அறிக்கையை மாதவி புரி புச், அவரது கணவர் தாவல் புச் மற்றும் அதானி குழுமம் மறுத்தது.

இந்நிலையில், அனைத்து தரப்பு விளக்கத்திற்கும் பதிலளிக்கும் விதமாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், செபி அமைப்பில் இருந்து கொண்டே மாதவி புரி புச், தனது கணவர் பெயரை பயன்படுத்தி மறைமுகமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மாதவி புரி புச், சிங்கபூரில் நடத்தி வந்த ஆலோசனை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாதவி புரி புச் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.