மாதாபி புச், ராகுல் காந்தி எக்ஸ் தளம்
இந்தியா

”அதானியின் பணத்தை செபி தலைவர் மாதாபி புச் பாதுகாக்கிறார்; அவரை யார்..?” - ராகுல் காந்தி கேள்வி

”அதானியின் பணத்தை செபி அமைப்பின் தலைவர் மாதாபி புச் காக்கிறார்” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்

Prakash J

ராகுல் காந்தி தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”அதானியின் பணம், அவரது மதிப்பு மற்றும் நற்பெயரைப் செபி தலைவர் பாதுகாக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது, மேலும் அவரை யார் பாதுகாக்கிறார்கள்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

”தற்போதைய ஆட்சியானது நாட்டின் செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் தீவிரமாகக் குவிப்பதாகவும் செபி போன்ற அமைப்புகளை இதற்காக பயன்படுத்துவதால் மிகவும் ஆபத்தான வடிவிலான விஷயமாக இந்திய அரசு நிறுவனங்கள் மாறிவிட்டது என்றும் செபி தலைவர் மாதாபி புச் ஊழல் ஆரம்பத்தில் கற்பனை செய்ததைவிட ஆழமாகச் செல்கிறது.

சாமானிய இந்தியர்களையும் அவர்களின் முதலீடுகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளை துறந்துவிட்டு, பரந்த அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

”காங்கிரஸ் தொடர்ந்து இந்தப் பிரச்னைகளை எழுப்பி வருகிறது, இந்த ஊழல்களை விசாரித்து, பொதுமக்களுக்கு உண்மையை அம்பலப்படுத்துகிறது” என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும் அவர், “பங்கு மோசடி குற்றச்சாட்டுகளில் அதானிக்கு க்ளீன் சீட் வழங்குவதற்காக அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் இந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார். செபி தலைவர் மாதாபி புச் ஐசிஐசிஐயிடம் இருந்து எதற்காகப் பணம் எடுத்தார்? செபியின் தலைவராக இருக்கும்போது, பட்டியலிடப்படாத நிறுவனங்களில் அவர் எப்படி பங்குகளை வைத்திருக்க முடியும் என்றும், அந்த நிறுவனம் ஸ்டார்ட்அப் இந்தியாவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை ஏன் பெற்றது” என்றும் கேள்வி எழுப்பினார். ”விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை, ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை - நாங்கள் விசாரித்தோம், கேள்வி கேட்கிறோம், நேரம் வரும்போது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

இதையும் படிக்க: ’என்கிட்ட பணம் இல்லை.. உங்ககிட்ட இருக்குமா’- ரத்தன் டாடாவின் எளிமையான குணம்பற்றி அமிதாப் நெகிழ்ச்சி!