இந்த நூற்றாண்டுக்குள் இந்திய கடலோர பகுதிகளில் கடல் மட்டம் அதிகம் உயர வாய்ப்புள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ’’பருவ நிலை மாற்றம் காரணமாக, இந்திய கடலோர பகுதிகளில் கடல் மட்டம் வெவ்வேறு விகிதங்களில் மாறி வருகிறது. இதனால் கங்கை, கிருஷ்ணா, கோதாவரி, காவேரி உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகள் மூழ்கும் ஆபத்துள்ளது என கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கடல் மட்டம் 1990 ஆம் ஆண்டு முதல் 2100 ஆம் ஆண்டுக்குள் 3.5 முதல் 34.6 அடி வரை உயர வாய்ப்புள்ளது எனவும் இதனால் கடலோர நிலத்தடி நீரின் உப்பு தன்மை அதிகரிக்கும், நிலங்கள் அழியும் ஆபத்துள்ளதாகவும் இதன் காரணமாக குஜராத்தில் உள்ள கம்பட் மற்றும் கட்ச், மும்பை மற்றும் கொங்கன் கடலோரம் மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட கூடிய இடங்களாக உள்ளதென்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கடலோர பகுதிகளை காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது’’ என்றும் அவர் தெரிவித்தார்.