இந்தியா

“தூக்கி வீசப்பட்டோம்; அலறல் சத்தங்கள் கேட்டன”- விமான விபத்தில் தப்பித்த இளைஞரின் அனுபவம்

webteam

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளாவுக்கு வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்திற்குள்ளானது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தில் பாய்ந்து இரண்டாக உடைந்து. அதில் விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் துயர்மிகு நேரடி அனுபவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கோழிக்காடு எலாத்தூரைச் சேர்ந்தவர் ஜூனாயத். வயது 25. விபத்து ஏற்படுவதற்கு முன்பு மிகப்பெரும் சத்தம் ஏற்பட்டதாகக் கூறுகிறார். "நாங்கள் சாதாரணமாகத்தான் தரையிறங்கி இருந்தோம். முதலில், விமானம் தரையிறங்க முயன்றது, பின்னர் மீண்டும் புறப்பட்டது. தரையிறங்குவதற்கான இரண்டாவது முயற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. விமானத்தின் வேகம் அதிகமாக இருந்தது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உணரும் முன்பே, அது ஓடுபாதையில் இருந்து விலகி இரண்டாக உடைந்தது " என்றார்.

விமானத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜூனாயத் காயமின்றி தப்பித்துள்ளார். முன் பகுதியில் அமர்ந்திருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். "ஏதோ என் தலைமீது மோதியது. ஆனால் எனக்குக் காயமில்லை. சில குழந்தைகள் இருக்கைகளில் இருந்து வெளியே விழுந்தனர்" என விபத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். துபாயில் கணக்காளராகப் பணியாற்றும் அவருக்கு கொரோனா காரணமாக நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டள்ளதால் அவர் வீடு திரும்பியுள்ளார்.

"இன்னமும் அந்த நினைவில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. என் இருக்கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அலறல் சத்தங்கள் கேட்டன. நான் பாதுகாப்பாக மீட்கப்பட்டேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை" என்கிறார் விபத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடாத ஜூனாயத்.