’என்னை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பினர், அதனால் நானும் 'அல்லாஹு அக்பர்' என கூற ஆரம்பித்தேன்; நான் கவலைப் படவில்லை’ என கர்நாடக கல்லூரி மாணவி முஸ்கான் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸைச் சேர்ந்தவர்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவி உடையணிந்து கோஷம் எழுப்பிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தபட்ட்ட மாணவி முஸ்கான் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ''நான் என்னுடைய அசைன்மெண்டை சமர்பிப்பதற்காக இன்று கல்லூரிக்குச் சென்றேன். நான் புர்கா அணிந்திருந்த காரணத்தால், எங்கிருந்தோ வந்த சிலர் என்னை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்தனர். புர்காவை கழற்றிவிட்டு கல்லூரிக்குள் செல்லுமாறு அதிகாரத்துடன் கூறினர். நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது, அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். நான் கடந்து சென்றேன்.
தொடர்ந்து அங்கு கூடிய பலரும் என்னை துரத்தினர். அப்போது என்னுடைய கல்லூரி முதல்வரும், ஆசிரியரும் எனக்கு ஆதரவாக நின்றனர். அவர்கள் தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் என முழங்கியதால் நான் அல்லாஹூ அக்பர் என முழக்கமிட்டேன். அவர்களில் சிலர் விரல்களை உயர்த்தி காட்டினர். எனக்கு சிறிது பயம் ஏற்பட்டது. பின்னர் என் கல்லூரி ஆசிரியர்களை பார்த்ததும் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்'' என்றார்.
இதையும் படிக்கலாமே: வலுக்கும் ஹிஜாப் பிரச்னை... தமிழகத் தலைவர்களின் கண்டனக் குரல்! #PTDigitalExclusive