மும்பையில் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் இரவு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தண்ணீர் அதிகளவு தேங்கியதால் அந்தேரி, மலாட் உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 200 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குர்லா கிழக்கு பகுதி, நேரு நகர், செம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை தொடரும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 14 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.