இந்தியா

டெல்லியில் ஒருமாதத்திற்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

டெல்லியில் ஒருமாதத்திற்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

கலிலுல்லா

தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாட்டின் காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றின் தரமானது அபாயகரமான கட்டத்தில் இருந்தது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நேரடியாக காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் பள்ளிகள் கல்லூரிகள் தேதி அறிவிப்பின்றி மூடப்படும் என டெல்லி அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பள்ளிகள் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்ட நிலையில், தற்பொழுது தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான கட்டத்தில் இருந்து மிக மோசமான கட்டத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக காற்றின் தரம் சற்று உயர்ந்து வருவதால், டிசம்பர் முதல் வாரத்தில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவிலிருந்து மோசமான பிரிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கனரக வாகனங்கள் உள்ளே நுழைய தடை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.