Narendra Modi Twitter
இந்தியா

பிரதமரின் ’மன் கி பாத்’ பேச்சை கேட்காத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம்! அதிர்ச்சி புகார்

PT WEB

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

டேராடூனில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. பள்ளியின் வாட்ஸ்அப் குரூப்பில் அபாரத்திற்காக இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய பெற்றோர் மற்றும் மாணவர்கள் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ஆரிஃப் கான் டேராடூன் மாவட்ட தலைமை கல்வி அலுவலருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து மூன்று நாட்களில் பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாநில கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஆரிஃப் கான் கூறுகையில், “சம்பந்தப்பட்ட டேராடூனில் உள்ள அந்த தனியார் பள்ளி தன்னுடைய மாணவர்களுக்கு அனுப்பிய உத்தரவில் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமையன்று பள்ளிக்கு வராத மாணவர்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது மருத்துவ அறிக்கை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் அந்த தகவலின் ஸ்கிரீன் ஷாட்டை காண்பித்தார்கள்” என்றார். மேலும், தனியார் பள்ளிகள் தங்களது நிர்வாக நிதிச் சுமையை சமாளிக்க மாணவர்களிடம் இதுபோன்று பல்வேறு விதங்களில் பணம் வசூலிக்கிறார் என்றும் இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளார்.

Narendra Modi

இதுகுறித்து தலைமை கல்வி அலுவலர் பிரதீப் குமார் கூறுகையில், “விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 நாட்களில் பள்ளி விளக்கம் அளிக்கவில்லை என்றால் மாணவர்களிடம் பணம் கேட்டது உறுதி செய்யப்படும். அதன்பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தனியார் நடவடிக்கைகளுக்காக தனியார் பள்ளிகள் ஒருபோதும் பொருளாதார ரீதியில் பெற்றோருக்கு அழுத்தம் தரக் கூடாது. ஒரு வேளை பணம் வசூல் செய்யப்பட்டிருந்தால் திரும்பி மாணவர்களிடம் கொடுக்கப்படும்” என்றார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அவர் வானொலியில் தனது 100 ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை ஆற்றியிருந்தார். இதற்கான நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பாஜகவினர் தரப்பினர் பொதுமக்கள் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.