இந்தியா

ரஃபேல் ‌மறுசீராய்வு ‌மனுக்கள் : இன்று தீர்ப்பு

ரஃபேல் ‌மறுசீராய்வு ‌மனுக்கள் : இன்று தீர்ப்பு

webteam

ரஃபேல் போர் விமா‌னம் வாங்கும் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் ‌மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்ச‌நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. 

இதனையடுத்து தீ‌ர்ப்பை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் மத்திய அரசு ரஃபேல் வழக்கில் பல தகவல்களை மறைத்துள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணையை நடத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் கே கவுல், கே எம் ஜோசப் ஆகியோர் ‌அமர்வு இதனை விசாரித்தது.

இந்த விசாரணையின்போது ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த பாதுகாப்புத்துறையின் ஆவணங்களின் நகல்களை மனுதாரர்கள் தாக்கல் செய்தனர். பின்னர் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், திருடுபோன ரஃபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் ஹிந்து பத்திரிகை தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் வேணுகோபால் தெரிவித்தார். மேலும் பாதுகாப்புத்துறையின் ‌ரகசிய ஆவணங்களை நகலெடுத்திருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.  இரு தரப்பு வாதங்களும் முடிவற்ற நிலையில், மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்‌‌றம் இன்று தீர்ப்பளிக்கிறது.