ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்துள்ள ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கடந்த அக்டோபர் 16ம் தேதி கைது செய்தது. இதையடுத்து ப.சிதம்பரம் தொடர்ந்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை முடிந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
முன்னதாக இதே வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்திருந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியிருந்தது. எனினும் அமலாக்கத்துறையும் இதே வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ததால் அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருக்க நேரிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதன்முதலாக கைது செய்யப்பட்ட சிதம்பரம் செப்டம்பர் 5ம் தேதி முதல் திகார் சிறையில் இருந்து வருகிறார். தற்போது ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.