இந்தியா

பிரசாந்த் பூஷனுக்கு என்னென்ன தண்டனைகள் ? இன்று அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்

பிரசாந்த் பூஷனுக்கு என்னென்ன தண்டனைகள் ? இன்று அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்

jagadeesh

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சித்த விவகாரத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

கொரோனா சமயத்தில் விலை உயர்ந்த வெளிநாட்டு ரக மோட்டார் சைக்கிளுடன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாப்டே முகக்கவசம் அணியாமல் அமர்ந்து இருப்பது மாதிரியான புகைப்படம் வெளியாகியிருந்தது. அதுதொடர்பாக பிரசாந்த் பூஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு இருந்ததாகக் கூறி அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி மிஸ்ரா தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. பிரசாந்த் பூஷன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் அவருக்கான தண்டனை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் மன்னிப்பு கேட்பது தனது மனசாட்சிக்கு விரோதமானது என கூறி மன்னிப்பு கேட்க மறுத்திருந்தார் பிரசாந்த் பூசன்.

இந்நிலையில் இந்த வழக்கில் இவருக்கான தண்டனை குறித்த உத்தரவுகளை இன்று அறிவிக்கவுள்ளது உச்சநீதிமன்றம். முன்னதாக பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை எதையும் வழங்க வேண்டாம், மனிதாபிமான அடிப்படையில் அவரை மன்னிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.