இந்தியா

சபாநாயகர் நோட்டீஸ்-க்கு உச்சநீதிமன்றம் தடை: அறந்தாங்கி எம்.எல்.ஏ வரவேற்பு!

சபாநாயகர் நோட்டீஸ்-க்கு உச்சநீதிமன்றம் தடை: அறந்தாங்கி எம்.எல்.ஏ வரவேற்பு!

webteam

சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி வரவேற்றுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரின் மீது சபாநாயகரிடம், கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.

இந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகவும், எனவே சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமெனவும் வழக்கில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்தது. 

இதையடுத்து வழக்குத் தொடர்ந்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான, அறந்தாங்கி ரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘’சபாநாயகர் எங்களுக்கு அனுப்பிய நோட்டீஸ்-க்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. தர்மம் வென்றது, நீதி வென்றது என்று சொல்லுமளவுக்கு இந்த தடை உத்தரவை பிறப்பித்து, சபாநாயகரின் நோட்டீஸுக்கு விளக்கம் கேட்டிருக்கிறது, உச்சநீதிமன்றம்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் கட்சியிலும் ஆட்சியிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டது. அவரது நல்லாட்சியும் கட்சியும் சிறப்பாக செயல் பட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். எப்படி இருந்தால் நன்றாக செயல்படலாம் என்று சில யோசனைகளை சொன்னோம். அதற்காக எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். மற்றபடி கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எதுவும் செய்ததில்லை. ஆனால், ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்துவதாகக் கூறி, அவரும் அவரோடு இணைந்து 11 எம்.எல்.ஏக்களும் ஆட்சியை எதிர்த்தார்கள். அவர்களுக்கு அமைச்சர், துணை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.  இந்த கட்சியும் ஆட்சியும் நிலைக்க வேண்டும், தொடர வேண்டும் என்று நினைத்த எங்களுக்கு தகுதி இழப்பு நோட்டீஸ் தர முயன்றார்கள். அதை நீதி தேவதை தடுத்திருக்கிறார்’’ என்றார்.