இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணை இனி லைவ்வாக !!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணை இனி லைவ்வாக !!

webteam

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடத்தும் வழக்கு விசாரணைகளை சோதனை முறையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது, மேலும் அரசியல் சாசன அமர்வு வழக்குகளையும் நேரடியாக ஒளிபரப்பலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின்  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இது குறித்த வழிமுறைகளை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். இந்தியாவில் நீதிமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் உச்சநீதிமன்றமும் நேரடி ஒளிபரப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்று கருத்து தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசின் கருத்தும் நேரடி ஒளிபரப்புக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. இது குறித்து பேசிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், வணிக ரீதியில் யாரும் பயன்படுத்திவிடாத வகையிலும் , ஒருமுறை மட்டுமே நேரடியாக ஒளிபரப்பப்படும் வகையிலும் இந்த நேரடி ஒளிபரப்பு இருக்க வேண்டுமென கூறினார். 

மேலும் முக்கியமான வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்புவதோடு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களின் அறை, கேண்டீன் போன்ற இடங்களில் மிகப்பெரிய திரைகளில் அவற்றை தெரியச் செய்யும் வசதி ஏற்படுத்தினால் நீதிமன்ற அறைகளில் நெரிசலை தவிர்க்க முடியும் என்ற யோசனையும் சேர்த்து கூறப்பட்டுள்ளது.