தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார்.
ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நள்ளிரவு 2 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
காங்கிரஸ்-மஜத சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, பல்வேறு வாதங்களை முன் வைத்தார். அதேபோல், மத்திய அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால், கர்நாடக பாஜக தரப்பில் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். நீண்டதொரு விவாதமாக இது அமைந்தது. ஆளுநரின் அதிகாரம் குறித்து அதிக நேரம் விவாதிக்கப்பட்டது. அதேபோல், ஆட்சி அமைக்கும் அளவிற்கு யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் யாரை அழைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியாக, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்பதற்கு நீதிபதிகள் தடைவிதிக்க மறுத்துவிட்டனர். அதேவேளையில், மே 15, மே 16 தேதிகளில் 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கின்றது என்று கர்நாடக ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார்.
இதனிடையே, ஏற்கனவே அறிவித்தபடி, ஆளுநர் பாஜகவிற்கு அழைப்பு விடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது