சபரிமலை கோயில் வழிப்பாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும் மற்றும் கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
ஆட்சி மாற்றங்களின் போது கேரள அரசு மாறுபட்ட நிலைப்பாடுகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு இந்திய இளைஞர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, ஏன் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது?
இந்து மதத்தில் தடை ஏதும் உள்ளதா என நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படியே மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் சபரிமலை தேவசம் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கேரள அரசு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீ்ப்பு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர்.நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சந்திரசூட், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் தனித்தனியாக தீர்ப்பு வழங்குகிறார்கள். இதில் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பை தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா வாசித்தார், அதில் "சபரிமலையில் நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. வழிபாடுகளில் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்களை கடவுளாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம். சபரிமலை கோயில் பக்தர்கள் மட்டும் தனி மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.நீதிபதி கன்வில்கருடன் இணைந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்துள்ளார்.சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.